The belief of Atheists!

பெரியார் வழியில் நடக்கும் ஆட்சி என்று என்னை திராவிடர் கழகத்தவர்கள் பாராட்டினார்கள் இதைவிட வேறு மதிப்புரை எனக்குத் தேவையில்லை திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் பெருமிதவுரை திருவாரூர், அக்.3_ திருவாரூரில் தந்தை பெரியார் சிலை திறப்புவிழாவிலே பேசியவர்கள், திமுக ஆட்சி பெரியார் கொள்கைப்படி நடக்கிறது என்று கூறினார்கள். இதைவிட மதிப்புரை எனக்குத் தேவையில்லை என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள். 30.9.2009 அன்று மாலை திருவாரூரில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையில் முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: திருவாரூர் பொதுக்கூட்டத்திற்கு வருகிறோம் என்று சொன்னார்கள்; வந்து பார்த்தால் திருவாரூர் எங்கே இருக்கிறது? என்று நாம் வியக்கின்ற அளவிற்கு திருவாரூர் நகரத்தையே மறைத்துக்-கொண்டு மின் விளக்குகள், தமிழ்பெருங்குடி மக்களுடைய தலைகள், எங்கெங்கு தெரிகிறதோ அங்கிங்கெனாதபடி கூட்டம்! கூட்டம்! கூட்டம்! அத்தகைய தேனடை நிறைந்தது போன்ற திராவிடப் பெருங்கூட்டத்தை நம்முடைய திருவாரூர் மாவட்டக் கழகத்தினுடைய செயல்வீரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரக் கழகத்தினுடைய செயலாளர்கள், அனைவரும் நடத்துகின்ற இந்த பாங்கினைக் காணும்போது நான் இந்த ஊருக்கு வந்த நேரத்திலும் மேடையிலே அமர்ந்து கடலெனத் திரண்டிருக்கின்ற இந்தப் பெருங்கூட்டத்தை காணுகிற நேயரத்திலும், அன்றொரு நாள் தம்பி ஸ்டாலின் சொன்னதைப்-போல, கனிமொழி இங்கே வர்ணித்துக் கூறியதைப்போல, கையிலே புலி, வில், கயல் சின்னங்கள் பொறித்த தமிழ் கொடி ஏந்திக்கொண்டு ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடிவந்த கோழை உள்ள நாடு இதல்லவே என்று எழுதிப் பாடிய, பவனி நடத்திய அந்தப் பாடல் எப்படிப்பட்ட அறைகூவலாக அமைந்து இன்றைக்கு எத்தகைய எழுச்சியை திருவாரூரில் மாத்திரமல்ல, தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியிருக்கிறது. என்பதை எண்ணி எண்ணி நான் மகிழ்கின்றேன், பூரிப்படைகின்றேன். கடந்த இரண்டு மூன்று நாட்களாக விழாக்கள் நடத்தி அறிஞர் அண்ணா அவர்களுடைய பெயரை, அவர்க்குரிய புகழை, அவரால் வளர்க்கப்பட்ட, உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தினுடைய சீர்மையை, பெருமையை எடுத்துச் சொல்லுகின்ற வாய்ப்பு எனக்கும், நம்முடைய கழக முன்னணியினருக்கும் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை, நடத்தியபோது அந்த நிறைவு விழா பேருரையில், இறுதிக் கட்டத்தில் நான் சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினேன். அந்தப் பேச்சில் இழையோடிய அந்தக் கருத்தை இங்கே மீண்டும் எடுத்துக்கூற விரும்புகிறேன். இந்த இயக்கத்திலே கட்டுப்பாடு கட்டிக் காக்கப்பட்டால், அண்ணா சொன்ன தாரக மந்திரங்கள், கடமை, கண்ணியம், இந்த இரண்டிலும் சிறு தவறு ஏற்பட்டால்கூட பரவாயில்லை. கட்டுப்பாடு என்பதில்தான் நாமெல்லாம் முனைப்பாக இருக்க வேண்டும் என்று நானல்ல, தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் சொன்னார். கட்டுப்பாடு எது? எதிலே? என்றால், ஒரு தவறு செய்து விட்டு கட்டுப்பாடாக இதில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து மறைப்பதிலே கட்டுப்பாடு அல்ல. கட்டுப்பாடு காப்பதற்காக, கடமையை மறந்து, கண்ணியத்தைத் துறந்து, பெரியார் சொன்னது கட்டுப்பாடு மாத்திரம் தானே என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது என்பதை நான் காஞ்சிபுரம் விழாவிலே எடுத்துச் சொன்னேன். அதை காஞ்சியை அடுத்து திருவாரூர்_திராவிட இயக்கங்களுடைய வேர், திராவிட இயக்கத்தினுடைய தூண் என்ற நிலையில் இங்கே மீண்டும் அதைச் சொல்ல நான் விரும்பினேன், ஆகவே சொன்னேன். ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் வந்தால் காலையில் திருவாரூரில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான விழா பற்றி எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டார்கள். திருவாரூரில் உலகச் சாதனைகளில் ஒன்றாக – உலகப் பல்கலைக்கழகம் – மத்தியப் பல்கலைக் கழகம் என்ற பெயரால் இன்றைக்கு மத்திய அமைச்சர் கபில் சிபல் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அதற்குத் திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் என்று அறிவிக்கப்-பட்டிருக்கின்றது. எனக்கொன்று நினைவுக்கு வருகிறது. நீங்களும் சொன்னால், ஆமாம் என்று நினைவு படுத்திக் கொள்வீர்கள். சுமார் அய்ம்பதாண்டுகளுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலிலே நிற்பதைப் பற்றி பேட்டி அளித்த போது சொன்னார் – வடக்கே உள்ள ஆட்சி, தமிழ்நாட்டிற்கு இந்த அய்ந்தாண்டுத் திட்டத்திலே ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமே-யானால், திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்த தேர்தலிலே அவர்களை எதிர்த்து போட்டியே இடாது என்று சொன்னார். அதாவது அய்ம்ப-தாண்டு-களுக்கு முன்னால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு திட்டம் வந்தால், அதற்காக தேர்தலையே நாங்கள் கைவிடுகிறோம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதற்குக் காரணம், ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் வந்தால் தமிழ்நாட்டை வளமாக வாழ வைக்கலாம் என்ற அந்தக் கனவின் காரணமாகத் தான் அன்றைக்கு அண்ணா அப்படிச் சொன்னார். ஆனால் அன்றைக்கு அண்ணா கண்ட கனவு, அண்ணா சொன்ன அந்த வார்த்தை எப்படி பலித்திருக்கிறது என்றால், ஒரு அய்ந்தாண்டு திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் கேட்டீர்கள். ஆனால் ஒரே நாளில் இந்த ஒரு திட்டத்திற்கு – பல்கலைக்கழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை உங்களின் தம்பிமார்கள் இன்றைக்குப் பெற்று வந்திருக்கிறோம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே என்பதை எண்ணிப் பார்க்கும்போது இந்த அய்ம்பதாண்டு காலத்திலே அரசியலிலே ஏற்பட்டிருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், மாறுதல்கள், அரசியலிலே நம் போன்ற கட்சிகளுக்கு உருவாகியிருக்கின்ற வளர்ச்சி, வளம், பலம் இவைகளை எல்லாம் எண்ணியெண்ணி நாம் பூரிப்படையக் கூடிய வகையிலே அமைந்திருக்கின்றது. ஆயிரம் கோடி ரூபாய் அன்றைக்கு அவ்வளவு பெரிதாகத் தெரிந்தது. அய்ந்தாண்டுத் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் தருவதாக நீங்கள் வாக்களிப்பீர்களேயானால், தி.மு.க. இந்தத் தேர்தலிலே நிற்காது என்று அண்ணா அறிவித்தார். ஆனால் அண்ணாவின் அந்த அறிவிப்பை அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை, ஒப்புக் கொள்ளவில்லை, தேர்தல்கள் தொடர்ந்து நடந்தது, தி.மு. கழகம் தன்னால் இயன்ற அளவிற்கு தன்னுடைய வலிமையை ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தன்னால் முடிந்த அளவிற்கு ஜனநாயக வாய்மையை – வலிமையைக் காட்டியது. அதன் விளைவு இன்றைக்கு திருவாரூரில் தமிழகத்திற்கு மாத்திரமல்ல, ஒரே ஊரில் ஒரு பல்கலைக் கழகம், மத்தியப் பல்கலைக் கழகம் அமைக்க ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டம் என்று பத்திரிகைகளிலே தலைப்புச் செய்திகள் வந்திருக்கின்றன என்றால், இதைப் பார்த்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். சிலர் மருட்சியடையக் கூடும். அவர்களைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. அவர்களைக் கண்டிக்கவும் இல்லை, அவர்களை கேலி புரியவும் தயாராக இல்லை. எதற்கெடுத்தாலும் பதிலுக்கு பதில் நான் காஞ்சி விழாவிலேயே சொல்லியிருக்கிறேன். இனி எனக்கு இருக்கின்ற வயதுக்கு – நான் இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறேன் என்ற அந்த அளவிற்கு என்னைப் பொறுத்தவரையில் யாருக்கும் பதிலுக்குப் பதில், – விமர்சனத்திற்கு விமர்சனம், – கண்டனத்திற்குக் கண்டனம் என்றெல்லாம் நான் சொல்லிக் கொண்டிருக்கப் போவதில்லை. என்ன தான் என் மீது தாக்குதல் நடந்தாலும் – எத்தனை கணைகள் பொழிந்தாலும் – என் வழியிலே நான் போய்க் கொண்டே இருப்பேன். வந்து பாய்கின்ற கணைகள் தேயலாம். என் உள்ளம் தேயாது. (கைதட்டல்) வந்து பாய்கின்ற அம்புகளின் கூர் மழுங்கலாம். என்னுடைய உறுதி மழுங்காது. அந்த உறுதியோடு நான் என்னுடைய பயணத்தை நடத்திக் கொண்டே இருப்பேன் என்று அன்றைக்கு நான் சொன்ன சொல்லைத் தான் இன்றைக்கும் திருவாரூர் வீதியிலே வழி மொழிகிறேன். காஞ்சியிலே அன்றைக்கு முன் மொழிந்ததை இங்கே வழி மொழிகிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கிக் கொள்ளுங்கள், என்ன வேண்டுமானாலும் கேலி பேசிக் கொள்ளுங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் என்னைத் திட்டிக் கொள்ளுங்கள், அதற்குப் பதில் அளிக்க, அதே காரசாரமாக அல்ல விளக்கமாக – நீங்கள் சொல் வதிலே என்ன தவறு? என்று இடித்துரைக்க என்னுடைய நண்பர்கள், என்னுடைய தோழர்கள், என்னுடைய தம்பிமார்கள் போதும், நான் அதற்காக என் காலத்தைச் செலவிடத் தயாராக இல்லை. காரணம், அண்ணாவின் பிறந்த நாளை பெரும் விழாவாகக் கொண்டாடியிருக்கின்ற நேரத்தில், எதற்கெடுத்தாலும் பதிலுக்குப் பதில் என்று சொல்லி, பத்திரிகைகாரர்களின் வியாபாரத்தைப் பெருக்கிட நான் துணை போக விரும்பவில்லை. பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஆட்சி இன்றைக்கு கருணாநிதி இன்னாரைப் பற்றி இன்னது சொன்னார் என்று ஒரு செய்தியைப் போட்டு – மறுநாள் அந்த இன்னார் எனக்குப் பதில் சொல்லி, அந்தப் பதிலையும் மறுநாள் தலைப்புச் செய்தியாகப் போட்டு – இரண்டு செய்திகளையும் விலை பொருள்களாக ஆக்குகின்ற பத்திரிகைக்காரர்கள் உண்மையிலேயே ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்றவர்கள் அல்ல. எனவே பத்திரிகைகாரர்களிடமிருந்து நானும் தப்பித்து – ஜனநாயகமும் தப்பித்து – ஜனநாயகத்தைப் பாராட்டுகின்ற நம் போன்ற கட்சிகளும் தப்பித்து ஒரு மறு மலர்ச்சியை தமிழகத்திலே உருவாக்க முடியுமென்று நான் கருதுகிறேன். தந்தை பெரியாரின் சிலையை இன்றைக்கு மாலையிலே திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட சிலையை தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து விட்டு இங்கே வந்தேன். அங்கே பேசியவர்கள் எல்லாம் சொன்னார்கள். பெரியாரின் கொள்கைகளை, அவருடைய கருத்துகளை, இன்றைக்கு ஏற்றுக் கொண்டு நடைபோடுகின்ற ஆட்சி, இந்த ஆட்சி என்றார்கள். அதை விடப் பெரிய மதிப்புரை எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை. அந்த மதிப்புரையை தொடர்ந்து நான் காப்பாற்ற கடமைப்பட்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1967இல் தொடங்கி இதுவரையில் எந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சென்னை ராஜ்யம் என்ற இந்த மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவோம் – தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக சங்கரலிங்கனார் என்ற தேசத்தியாகி, விடுதலைப் போராட்ட வீரர், விழுப்புண் ஏற்று 70 நாட்கள் உண்ணா-நோன்பிருந்து உயிர் நீத்திருக்கிறார். அப்படி உயிர்விட்ட அந்தத் தியாகிக்குச் செய்யும் கடமையாக திராவிட முன்னேற்றக் கழகம் சங்கரலிங்கனாருடைய அந்த ஆசையை நிறைவேற்ற சென்னை ராஜ்யம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியமைக்கும் என்று அண்ணா சொன்னார், நாங்கள் எல்லாம் சொன்னோம், வாக்குறுதி வழங்கினோம், நம்முடைய தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டோம். ஆட்சிக்கும் வந்தோம். அண்ணா சட்டமன்றத்திலே எழுந்து நின்று, இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கிறேன், நான் தமிழ் நாடு என்று சொல்வேன், உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க, வாழ்க, வாழ்க என்று மும்முறை சொல்ல வேண்டும் என்று சொல்லி, அண்ணா ஊர்வலத்தில் செல்லும் தலைமைத் தொண்டனைப் போல, சட்டமன்றத்திலே தமிழ்நாடு என்று மூன்று முறை சொன்னார். அந்த மூன்று முறையும், எல்லா கட்சிகளையும் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தங்குதடையின்றி தமிழ்நாடு என்றதும், வாழ்க, வாழ்க, வாழ்க என்று ஒலித்தார்கள். அந்த வாழ்த்தொலி நூறாண்டு நிறைவு கடந்தும் அண்ணாவை வாழ வைக்கக் கூடிய வாழ்த்தொலி என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அதைப் போல பெரியாரின் மூலக் கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதை திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்குவோம் என்று அறிவித்தோம். சுயமரியாதை திருமணங்கள் – சட்டப்படி செல்லும் என்ற தீர்மானத்தை அவையிலே முன்மொழிந்து அதை நிறைவேற்றினோம். தந்தை பெரியார் அக மகிழ்ந்தார், புளகாங்கிதம் உற்றார், பூரிப்பு கொண்டார். அடுத்து இந்தி ஆதிக்கத்தை, இந்தி மொழியை அல்ல; கட்டாய இந்தியை _இந்தி நம்மீது திணிக்கப்படுவதை எதிர்த்து இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து _ இனி தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டம் இல்லை, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழித் திட்டம் தான், இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம், என்ற இந்த மூன்றாவது வாக்குறுதியையும் நிறைவேற்றினோம். பிறகு அண்ணா மறைந்தார். அண்ணா மறைந்த பிறகு அண்ணா என்னென்ன கொள்கைகளுக்காக வாழ்ந்தாரோ, எந்தப் பெரியாரின் கொள்கைகள் நிலைக்க வேண்டுமென்று அவர் பாடுபட்டாரோ அவைகளையெல்லாம் நிறைவேற்றினோம். கம்யூனிஸ்ட்டுகள் நிலையாக இல்லை அந்தக் கொள்கைகளிலே ஒன்று தான் தம்பி ஸ்டாலின் இங்கே பேசும்போது குறிப்பிட்டாரே ஏழை விவசாயிகளுடைய வேதனைகளைத் தீர்க்கின்ற ஒரு வழி – இந்தத் தஞ்சை மாவட்டத்தில் எனக்குத் தெரியாதது அல்ல _ எனக்குத் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியாததும் அல்ல _ இந்தத் தஞ்சை மாவட்டத்திலே பிறந்த நான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவனாக இருந்தாலும் – நான் அடிக்கடி சொல்வதைப் போல – நான் பெரியாரைச் சந்தித்திருக்காவிட்டால், என்னுடைய சந்திப்பும் விவாதங்களும் அண்ணன் ஜீவானந்தம் அவர்களோடு மட்டுமே முடிந்திருக்குமேயானால், பெரியாரையோ அண்ணாவையோ நான் சந்தித்திருக்காவிட்டால் -நான் இப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருப்பேன்! காரணம், அந்தச் சமதர்மக் கொள்கைகள், பொதுவுடைமைக் கொள்கைகள் – பூத்துக் குலுங்கும் கம்யூனிஸ்ட் கட்சியினால் நான் கவரப் பட்டவன் – கம்யூனிஸ்ட்களால் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் இன்றைக்கு கம்யூனிஸ்ட்கள் அந்தக் கொள்கைகளிலே பலர் நிலையாக இல்லை. ஆகவே நான் கம்யூனிஸ்ட் என்று சொல்ல மாட்டேன், கம்யூனிசத்தின்பால் எனக்கு இருக்கின்ற அக்கறை, ஆர்வம், பிடிப்பு அதன் காரணமாகச் சொல்கிறேன் – மணலி கந்தசாமி என்னைப் பாராட்டினார் என்றார் எதற்காக? நிலங்களிலே உழுது சாகுபடி செய்கின்ற குத்தகைதாரர்கள் குடியிருக்கின்ற அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு வயல்களிலே அவர்களுக்காக இருந்த வீடுகளை, அவர்களுடைய குடிசைகளை அவர்களுக்கே சொந்தமாக்கி, அவர்களே அதை விற்க வாங்க உரிமையுடைய பொருளாக ஆக்கிட குத்தகைதாரர்கள் பாதுகாப்பு என்ற சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே நான் பொறுப்புக்கு வந்ததும் வராததுமாக நிறைவேற்றி விவசாயிகளுடைய கண்ணீரைத் துடைத்த போது தான் மணலி கந்தசாமி அவர்கள் ஏராளமாக ரத்தத்தைச் சிந்தி, எங்களால் நிறைவேற்ற முடியாத ஒரு கொள்கைகயை, ஒரு துளி மையைச் சிந்தி, சட்டமாக ஆக்கி விட்டீர்கள், இன்றிரவு இந்த விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குச் சென்று – தங்கள் வீடுகள் கருணாநிதியால், தங்களுக்கு சொந்தமாக ஆக்கப்பட்டு விட்டதாகச் சொல்லி, சொந்த வீடுகளிலே தூங்குவார்கள் என்று சொன்னார். அந்தச் சொல் இன்னமும் என்னுடைய காதுகளிலே ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது. ஒரு விவசாயி இன்றைக்கு அவனுடைய கடன் முழுவதும் ரத்து செய்யப்பட்டது என்கிற போது எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறானோ, அதே மகிழ்ச்சியை அன்றைக்கு குடியிருப்பு மனைகள் எல்லாம் அவனுக்கே சொந்தம் என்று ஆக்கப்பட்ட போது அன்றைக்கு அந்த மகிழ்ச்சியை அந்த விவசாயி அடைந்தான். என்ன ஒரு சங்கடம் என்றால், அந்த நிலைமைகள், அதைப் பெற்றவர்களுக்கு, அதை அடைந்தவர்களுக்கு சில காலம் தான் ஞாபகத்திலே இருக்கும். அதற்குப் பிறகு அவர்களுடைய பிள்ளை குட்டிகள், பேரன் பேத்திகள், அவர்களுடைய காலம் வரையிலே அது ஞாபகத்திலே இருக்காது. ஞாபகத்திலே இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது ஞாபகத்திலே இருக்க வேண்டுமென்பதற்காக அந்த நன்றியை எதிர்பார்த்து நாம் அதைச் செய்யவில்லை. என் கடமையை நான் செய்கிறேன், எனக்கு அண்ணா கற்றுத் தந்த, பெரியார் கற்றுத் தந்த அந்தப் பொதுவுடைமைக் கருத்துகளை ஏற்றுக் கொண்ட இந்த நெஞ்சத்திற்கு நான் எந்தத் துரோகமும் செய்யாமல், யாருக்குப் பணியாற்ற வேண்டுமோ, எந்த விவசாயிகளுக்காகப் பாடுபட வேண்டுமோ, அந்த விவசாயிகளுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். யாருக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றாமல் விட்டிருக்கிறோம்? உங்களுக்குத் தெரியும். பின் தங்கிய மக்களுக்கு, மிக மிகப் பின் தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு – அதிலே யார் யாரையெல்லாம் சேர்க்க வேண்டுமோ, அவர்களை யெல்லாம் சேர்த்து அவர்களுக்கு படிப்பில், கல்வி முன்னேற்றத்தில், உத்தியோக உயர்வில், அவர்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கியிருக்கிறோம். உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். கடந்த ஆண்டு இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு- அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் மூன்று சதவிகிதம் தனி ஒதுக்கீடு என்று நிலைநாட்டிட, அதை அவர்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு புரட்சிகரமான சட்டத்தை சட்டசபையிலே நிறைவேற்றியிருக்கிறோம். ஏழை, எளியோர் மீது கொண்ட பாசம் சிறுபான்மை மக்கள் மாத்திரமல்ல சமுதாயத்தினுடைய அடித்தளத்திலே வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து புழுக்களாய், பூச்சிக்களாய் வாழக்கூடிய அளவிற்கு மடிந்து மாண்டு கொண்டிருக்கின்ற சமுதாயம் குறிப்பாக அருந்திய சமுதாயம் அந்த அருந்திய சமுதாயத்திற்கு மூன்று சதவிகிதம் என்று இன்றைக்கு அவர்களுக்கும் இடஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கின்றோம். அவர்களுடைய தொழில் என்ன? அவர்களுடைய சமுதாய அந்தஸ்து என்ன? அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படாமல் அவர்களும் மனிதர், மனிதரில் அவர்களும் மனிதர்கள்; மண் அன்று என்று அருந்ததியர் என்றாலும் ஆதிதிராவிடர் என்றாலும், அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டில் இந்த பங்கு அருந்ததியர்களுக்கு உண்டு என்று அறிவித்து வழங்கியிருக்கின்றோம். ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற – ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது என்று சொல்லப்படுகின்ற அரவாணிகள் – அந்த சமுதாயத்திற்குக் கூட அவர்கள் கேட்டபோதெல்லாம் ரேஷன் கார்டு வேண்டும் என்று கேட்டார்கள். அரவாணிகளுக்கு அதைத் தந்திருக்கின்றோம், அவர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று கேட்டார்கள், அதை வழங்கியிருக்கின்றோம். இன்னும் என்னென்ன மனித உரிமைகள் அவர்களுக்கு வேண்டுமோ அந்த மனித உரிமைகள் அவைகளையெல்லாம் அவர்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றோம். இது என்ன ஆட்சி? ஏதோ உயர் வகுப்பாருக்கு மாத்திரம், மிட்டா மிராசுதாரர்களுக்கு மாத்திரம், பளபளப்பான கடுக்கண்களை மாட்டிக் கொண்டிருக்கின்ற, செல்வச் சீமான்களுக்கு மாத்திரம் நடைபெறுகின்ற ஆட்சி அல்ல; இது சாதாரண சாமானிய குடிசைவாழ் மக்களுக்காக இருக்கின்ற ஆட்சி. அதனால் தான் எனக்கு முன்னால் பேசிய தம்பிகளெல்லாம் பேசியதைப்போல் இந்த ஆட்சி நடைபெறுவதற்கு காரணமே ஏழை எளியோர்களுக்கான பாசம் தான், அந்த குறிக்கோள்தான் எங்கள் குறிக்கோள் என்று எடுத்துக்காட்டினார்கள். அதை நிறைவேற்றுகிற வரையில் நாங்கள் ஆட்சியிலே இருப்போம். அதை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை எங்களுக்கு ஏற்படுமேயானால், நாங்கள் ஆட்சியிலே இருக்க மாட்டோம் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். பிராமணன், சூத்திரன், சத்திரியன் என்றெல்லாம் பேசப்படுகின்ற சாதி வேறுபாடுகள், சாதி வித்தியாசங்கள் இந்த சமூக நீதிக்கு எதிரான கொள்கைகள் நாட்டில் நடமாடுகின்ற வரையில் திராவிட இயக்கத்திற்கு குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இந்த அரசியல் இயக்கத்திற்கு வேலை இருக்கிறது. அதைத்தான் அண்ணா சொன்னார் இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு திராவிட முன்னோற்றக் கழகத்திற்கு பணி இருக்கிறது என்று சொன்னார். அதை இங்கே குறிப்பிட்டு பேசியவர்களும் சுட்டிக் காட்டினார்கள். 50 ஆண்டு காலம் அல்ல 100 ஆண்டு காலம் ஆனாலும் திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகள் சமத்துவம் ஓங்கவும், சமதர்மம் வாழவும், சமத்துவ புரங்களாக ஒவ்வொரு கிராமத்து வீதிகளும், குடிசையில் வாழும் மக்களும், அதிலே வாழுகின்ற நிலையும் ஏற்பட்டால் இந்தியாவே சமத்துவபுரமாக ஆவது என்றைக்கு என்ற அந்த கணக்கு பிறகு இருக்கட்டும், முதலில் தமிழ் நாட்டை சமத்துவபுரமாக ஆக்குவோம்; அந்த சமத்துவ புரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களுடை நினைவாக எல்லோரும் சமம், எல்லோரும் இந்நாட்டு மக்கள், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலையை உருவாக்குவோம் அது வரையில் நமக்கு ஓய்வு இல்லை. அந்த வேலை தீர்ந்தால்தான் நாம் வீட்டிற்குச் செல்வோம் என்ற அந்த உறுதியோடு உங்களையெல்லாம் நான் பாராட்டி, நன்றி கூறி மகிழ்ச்சி தெரிவித்து விடைபெறுகின்றேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: