சிந்துசமவெளி சித்திர-குறியீடுகள் படும்பாடு:ஆராய்ச்சியாளர்கள் ஏன் வெவ்வேறுவிதமாக, வேறான ஆய்வகங்களில் பேசுகிறார்கள்?

சிந்துசமவெளி சித்திரகுறியீடுகள் படும்பாடு:ஆராய்ச்சியாளர்கள் ஏன் வெவ்வேறுவிதமாக, வேறான ஆய்வகங்களில் பேசுகிறார்கள்?

© வேதபிரகாஷ்

ஆய்வாளர்களை செம்மொழி மாநாடு படுத்தும் பாடு: செம்மொழி மாநாடு நெருங்க-நெருங்க ஆராய்ச்சியாளர்களின் நிலைப்பாடு பிரழ்கின்றது, கருத்துகள் மாறுகின்றன, விளக்கங்கள் தடுமாறுகின்றன, மொத்தத்தில் நடுநிலை மாறி, கோடிகளில் நடக்கவிருக்கும் மாநாட்டில் சிறப்புப் பெற, துடிப்பதுதான் மிஞ்சுகிறது. சரித்திர ஆசிரியர்களே “ஆரிய படையெடுப்பு சித்தாந்தம்” (AIT) சரித்திர ஆதாரமற்றது என்று ஒதுக்கியப் பிறகும்[1], அதைப் பிடித்துக் கொண்டு ஆட்சியாளர்களிடம் பரிசு பெறவேண்டும், சலுகைகள் அள்ளவேண்டும், வசதிகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்களது நிலையுள்ளது தெரிகிறது[2]. படிப்புத்தன்மை, ஆராய்ச்சிநெறி, முதலியவற்றை குழித்தோண்டி புதைத்து கிளம்பிவிடுகிறார்கள்.

சிந்துசமவெளி சித்திரகுறியீடுகள் படும்பாடு: சிந்துசமவெளி நாகரிகத்தின் எழுத்துகள்-எழுத்துமுறை முதலியவற்ரைப் பற்றி யாரும் வெற்றிகரமாக அவை எழுத்துகள் என்றோ, குறியீடுகள் என்றோ, சித்திர-எழுத்து என்றோ, சித்திரக்குறியீடு என்றோ தீர்மானமாகக் கொண்டு, அதற்குண்டான மொழி இதுதான் என நிரூபித்து, இருக்கின்ற எல்லா முத்திரைகளையும் படிக்கவில்லை[3]. ஏதோ தமக்கு வசதிக்கேற்றப்படி, ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளை எடுத்துக் கொண்டு அவற்றில் உள்ளவை மீன், ஆள், தூக்கி, காவடி, என படித்து, உடனே எல்லாவற்றையும் படித்தது மாதிரியும், அவையேல்லாமே எழுத்துகள் என்றும், அவ்வெழுத்துகள் ஒரு குறிப்பிட்ட மொழிதான் என்பது மட்டுமல்லாது அது தமிழ்தான் என்று கூறுவதுதான் வேடிக்கையான விஷயம்.

மதிவாணனுக்குப் பிறகு, பூரணசந்திர ஜீவாவின் ஆய்வு: “தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும்,” என்று சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திரஜீவா கூறினார், என்று இன்றைய “தினமரில்” செய்தி வந்துள்ளது[4]. முன்பு ஆர். மதிவாணன் என்பவர், இதில் ஆராய்ச்சி செய்ய இறங்கி, முத்திரைகளை எப்படியும் படித்து, அது தமிழ்மொழிதான் என்று கூறினார். ஆனால் வேடிக்கையென்னவென்றால், ஐராவதம் மகாதேவனே அதை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், ஸ்டீவ் ஃபார்மர் என்ற ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், மதிவாணன், சில இடங்களில் சிந்துசமவெளிக் குறியீடுகளை எழுதவைத்து அதைப் படித்தது போன்று காண்பித்ததை மோசடி[5] என்று எடுத்துக் காட்டினார். குறிப்பிட்டுள்ளதாவது, “Other recent forgeries, with opposing political purposes, include supposed finds by Dravidian scholars of Indus inscriptions on Tamil village walls”. “மற்ற கள்ளத்தனமான உருவாக்கிய குறியீடுகளில், அரசியல் ரீதியில் எதிர் கருத்தில் திராவிட பண்டிதர்கள் தமிழ் கிராம-சுவர்களின் காணப்பட்டதாகக் கூறப்படும் கல்வெட்டுகளும் / சின்னங்களும் அடங்கும்”, என்று கூறி அடிக்குறிப்பில் (எண்.3), இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது: “See, e.g, R. Madhivanan, Indus Script among Dravidian Speakers (Madras, 1995). The editor tells at the start that Indus Valley society originated among the ancient Tamils who created a “rich civilization which had flourished for millions of years”. We later find that “vestiges and remnants” of this multi-million-year-old civilization are alive and well in South India, as evidenced by photos in Madivanan’s book of fresh inscriptions on village walls”. அதாவது, “ஆர். மதிவாணன் Indus Script among Dravidian Speakers (Madras, 1995). என்ற புத்தகத்தைப் பார்க்கவும். தொகுப்பாசிரியர் சொல்வதாவது சிந்துசமவெளி நாகரிகமானது பழந்தமிழர்களிடமிருந்துத் தோன்றியது. “அவர்கள் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்த செழிப்பான நாகரிகத்தை உருவாக்கியவர்கள்”. நமக்கு அவர் பிறகு காண்பிப்பதாவது, அத்தகைய கோடி-கோடி வருட நாகரிகத்தின் எச்சங்கள்-மீதிகள் கிராம சுவர்களில் பளிச்சென்று காணப்படுவதாக அப்புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள் காட்டுவதேயாகும்”. ஆனால், இதை எத்தனை தடவை சொல்லியும் மதிவாணன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை! இப்பொழுது பூரணசந்திர ஜீவா என்பவர் வந்திருக்கிறார்.

தொல்லியல்துறை முதன்மை செயலரின் பேச்சு: சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் தொல்லியல் துறை கருத்தரங்கு நேற்று நடந்தது. இதைத் தொல்லியல்துறை முதன்மை செயலர் ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசியதாவது: “நமது எழுத்து வளர்ச்சி எங்கு துவங்கியது என்ற கேள்வி உள்ளது. சிந்து எழுத்திலிருந்து வந்ததா அல்லது இந்த சிந்து எழுத்து இடையில் வந்ததா என்ற கேள்வியும் உள்ளது. மயிலாடுதுறைக்கு அருகில் செம்பியன் கண்டியூரில் கிடைத்த கல்வெட்டில் நான்கு குறியீடுகள் கிடைத்தன. சிந்து எழுத்து குறியீடுகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறியீடுகளை வைத்து காலத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றாலும், எதை உணர்த்துகிறது என்று தெளிவாக தெரியவில்லை. சிந்து எழுத்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன”, இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்.

சிந்து எழுத்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன: தொல்லியல்துறை முதன்மை செயலர் ஸ்ரீதர் இவ்வாறு சொல்லி நிகழ்ச்சி ஆரம்பிதுள்ளபோது, பேச்சாளர் உறுதிசெய்யப்பட்டடுபோல பேசியது வினோதமாக இருந்தது.  நிகழ்ச்சியில், “சிந்து எழுத்தும் தமிழியும்ஓர் ஒப்பாய்வு‘ என்ற தலைப்பில், சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திர ஜீவா பேசியதாவது: “சிந்து எழுத்து முறை, படங்களை அடிப்படையாக கொண்டது என்கின்றனர். இது முழுவதும் படங்களால் ஆன எழுத்துக்கள் அல்ல. முழுமையாக எல்லா எழுத்தும் செயற்கை வடிவங்களால் ஆனது. செயற்கை வடிவம் மட்டுமல்லாமல், வடிவியல் கணித அடிப்படையில் வடிவங்களாக சிந்து எழுத்துக்கள் உள்ளன. இதற்கு காரணம் சிந்துவெளி மக்கள், நகர அமைப்புகளை வடிவமைக்கும் கட்டடக் கலையில் மிகச் சிறந்த அறிவு பெற்றிருந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி எழுத்துகளுக்கு செயற்கையான வடிவங்களை அமைத்தனர். எனவே, இந்த வடிவங்களுக்கு கொடுத்த பொருள் பொருந்தாமல் போய்விட்டது.

“இந்த சிந்து எழுத்து வடிவங்கள் தமிழி என்ற எழுத்து வடிவங்களுடன் பொருந்துகின்றன. இரண்டையும் ஒப்பிட்டு சிந்து எழுத்தை படிக்க முயற்சிக்கலாம் என்பது உறுதி. தமிழகத்தில் சிந்து எழுத்து வடிவங்கள் பெருமுக்கல், கீழ்வாலை, பொதிகைமலை குகை, இலங்கையில் யாழ்பாணத்தில் ஆணைக்கொட்டடி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும் என்பது உறுதி”, இவ்வாறு பூரணசந்திர ஜீவா பேசினார்.

சிந்து வெளியில் முந்து தமிழ்: ஜீவாவின் கருத்துப்படி சிந்து எழுத்துக்கள் கூட்டு எழுத்துக்கள். அந்த மரபு வடமொழியில் இன்றும் கையாளப்படுகிறது. தமிழில் ஓம் என்பது கூட்டெழுத்து. ஓ காரத்துள் ம் காரம் அடங்கியுள்ளது. அது போல் ஒரு சிந்து எழுத்து படத்தில் உள்ள எழுத்துக்களை பிரிக்கமுயல்வதே அவரது முறை. பிரித்த எழுத்துக்கள் பிராமி யின் வடிவத்தை ஒக்க வேண்டும். சிந்து எழுத்து திடுமென ஆவியாக போய் இருக்க வாய்ப்பு இல்லை. அது வேறு வடிவில் மாறி இருக்குமானால் அது இந்திய நாட்டின் ஒரு வரிவடிவமாக்வே இருக்க வேண்டும். எனில், அது பிராமியாகத்தான் இருக்கமுடியும் என்பதே அவர் அணுகு முறை. பூர்ண சந்திர ஜீவா ‘சிந்து வெளியில் முந்து தமிழ்’ என்ற நூலில் சிந்து வெளி முத்திரைகளோடு பிராமி வரிவடிங்களுக்கு உள்ள தொடர்பை ஆராய்ந்துள்ளார்[6]. சிந்து முத்திரைகளை 16 மெய்யெழுத்து வடிவங்களாகவும் 6 உயிரெழுத்து வடிவங்களாகவும் தமிழ் எழுத்துக்களோடு இணைத்துப் படித்துக் காட்டியுள்ளார்.

கொடுத்துள்ள உதாரணங்கள்: முப்பகய்ய = காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றிற்கும் பகையானவன்.
இம்பன = இவ்வுலத்தன்.
இயயார் = பொருந்தாதவர்.  இவ்வுலகத்திற்குரிய இன்பங்களை விரும்பாதவர்.

அண்ணிய்ம் – அண்ணிய்ம – அண்ணிம

அரசந = அணுகியருள் புரியும் அரசனுடைய.
அண்ணித்தல் = அணுகி அருள் புரிதல். இறைவன், அரசன் ஆகியோரது இயல்பு.
வய்யம் இரு இல் = உலகம் பெரிய இல்லம்.
கொயில் – அன்பு – அனலாவ = கோயில் மீது கொண்ட அன்பு நெருப்பாக வீசும்.
நய்ய = நெய்ய. நெய்க்கான. ஓணாள் = ஓண நாளுக்குரிய ஓர் இறை.
ஆதப = ஆதவ. வய்ர – வயிர எட்டிய = வைர வணிகத்தில் எட்டிப் பட்டம்
பெற்றவனது. எட்டி – செட்டி.

ஓர் = ஒப்பற்ற.
வயபண்ணா = வய வண்ணா = வய – அண்ணா = வலிய அண்ணல்.
இருவ்வோர் = கரிய நிறம் உடையோர்.
தவம் = மிக்க ஆற்றல்.

தவம் என்னும் கருத்துரு திராவிடருக்குரியது. சிந்து முத்திரைகளில் தவம் குறித்தச் செய்திகள் மிகுதியாக   உள்ளன. இறைவனே தவசியாக இருக்கும் பண்பாடு – நாகரிகம் சிந்து வெளியில் காணப் படுகிறது.   யோக நிலையில் வீற்றிருக்கும் மேலோன், ஆதிசிவன் என்று குறிப்பிடுகின்றனர்.

குறிப்பு:
ஆள் = ஆண்டவனாகிய, அவ் = தவம் மூத்த , ஈசக = ஈசனே. ஈசக – ஈசகன். ஈசன்
என்பதன் பண்டைக் கால் வடிவம்.  1337 ஆம் எண் முத்திரை தவசியாகிய இறைவனைக் குறித்தை அமைந்துள்ளது. இவை, ஓம்படைக் குளவியோடு கூடிய முத்திரை. இக்கால இரட்சைகளைப் போன்றதாகும். இவற்றால், சிந்துவெளியில் தவம் குறித்து விளக்கமான செய்திகளுள்ளதை  அறியலாம். அடுத்துள்ள முத்திரை 1605 இல் தவத்தை ‘ வய தவம்’ என்று குறிப்பிடுகிறது.

கோயில் நன்பட்தமி = கோயில் – நன்ப – அத்தமி = நண்பன் அத்தமி.
கோயிலிடத்து நெருக்கமான பற்றுடையவன் அத்தமி என்பான்.

இட இட = இடப்பக்கம் இடம் பெற்றுள்ள. ஆணாவோர் = ஆனின் இடப்பக்கம் இடம் பெற்றதால் ஆணாகும் இறைவி.  சிவனின்  இடப்பக்கம் இடம் பெற்றதால் ஆணாகும் இறைவி.  சிவனின் இடப்பக்கம் இடம் பெற்ற  இறைவியை குறித்த முத்திரை.

மி ஓர் கணய்ய = மீ – ஓர் – கண் – அய்ய. மேலேயும்  ஒரு கண்ணுடைய அய்யன். நெற்றிக் கண்ணிடைய சிவன்.

முகய்பண்ணா = முகம் – அய்வ – அண்ணா = முக அய்வண்ணா. ஐய்முகன் ஆகிய சிவன். அய்யி முகர் (2442) என்றும் பெயருண்டு. ஓமு = ஓம். ஓம்படைக் கிளவி.

சிந்துவெளி இறைவன் இவ்வுலகப் பற்றுகளில் இருந்து நீங்கியவன் என்பதை ‘ இம்பன இயயார்’ என்று குறிப்பிடுகிறது.

இவை அனைத்துக்கும் மேலாக, தமிழ் – தமிழ் இறைவி, தமிழ்த்தாய் என்ற சொல்லே ஒரு முத்திரையில் இடம் பெறுகிறது. ( 2068)

தமி = ஒப்பற்ற, தமிழத்தாள் = தமிழ் + அத்தள் = தமிழ இறைவி. தமிழுக்குறிய இறைவி தமிழ்த்தாய் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறது.

அத்தள் – அத்தன் என்பதன் பெண்பாற் பெயர். இவ்வாறு தமிழைப் பற்றிய ஒரு முத்திரையே காணப்படுவது தமிழின் சிறப்பை – தமிழின் தொன்மையை உணர்த்துகின்றது.  இப்படி அவர் விளக்கமளித்து, சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் தான் என்று முடிவுக்கு வருகிறார்!

சிவன் விஷயத்தில் மைக்கேல் விட்ஸெலை எதிர்க்கக்கூடியவர் பூர்ணசந்திரஜீவாதான்! கடந்த ஜூலை மாதம் மைக்கேல் விட்ஸெல் (Michael Witzel) வந்திருந்தபோது, அவரது சொற்பொழிவு நிகழ்ச்சிகளை மூன்று இடங்களில் –
1. சென்னை சமஸ்கிருத கல்லூரி (Rigveda and its language: 06-07-2009),

2. சென்னை பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவு (Origin and Development of Language: Language in South Asia: Phylogeny vs. Epigenetics: 09-07-2009 காலை), மற்றும்

3. ரோஜா முத்தையா நூலகம் (09-07-2009 மாலை) – ஏற்பாடு செய்திருந்தார். ஐராவதம் மஹாதேவன், ரோஜா முத்தையா அராய்ச்சி நூலகத்தில் “சிந்து ஆராய்ச்சி மையம்”, (Indus Research Centre, Roja Muthaiah Research Library, Chennai) என்பதின் தலைவர். 2008ல் ஆஸ்கோ பார்போல வந்து பேசியுள்ளார். இந்த ஆண்டு, மைக்கேல் விட்ஸெல் வந்துள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர் இவர்தாம். அப்பொழுது விட்ஸெல் சமஸ்கிருத கல்லுரியில் “சிவன் இந்திய கடவுளே இல்லை” என்று பேசினார்! அப்பொழுது போர்ணசந்திரஜீவா போன்றவர்கள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் வரவில்லை? மகாதேவன் அவருக்குச் சொல்லியிருக்கவேண்டாமோ? சொல்லாமலே வந்திருக்கவேண்டாமோ? அத்தகைய அந்நியருடன் பொருது புறமுதுகிட்டு ஓடவைத்திருக்கவேண்டாமோ? ஆனால் யாரும்[7] வரவில்லை!

மொழி-இன சிந்தாந்தங்கள் ஒட்டிய ஆராய்ச்சி முறைகள்: ஆராய்ச்சி தொடரட்டும், ஆனால் இத்தகைய அரசியல், மொழிவெறி, இனவெறி முதலிய சரித்திர ஆதாரமற்ற, சமூக-விரோத சித்தாந்தங்களுடன் முடிவைத் தீமானித்துக் கொண்டு ஆராய்ச்சி ஆரம்பிக்கும் போக்குத் தேவையில்லை. இதனால், ஆட்சியாளர்களிடம் பாராட்டு, பட்டம், சலுகை பெறலாம். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அராய்ச்சி நெறிமுறைகளுக்குட்பட்டு பாரபட்சம் இல்லாமல் செய்வதுதான் ஆராய்ச்சி, இவ்வாறு செய்வது எப்படி ஆராய்ச்சியாகும் என்று தெரியவில்லை. ஏன் ஐராவதம் மகாதேவனிடமே கருத்தைக் கேட்டுவிடலாமே? மகாதேவன் திருச்சி மாநாட்டில் என்ன பேசினார், ஆனால் பத்திரிக்கைகள் எவ்வாறு திரித்து வெளியிட்டன என்பனவை ஏற்கெனவே மேற்குறிப்பிட்டபடி, எடுத்துக் காட்டப்பட்டது[8]. ஆகவே தமிழ் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய குறுகிய அரசியல், ஆராய்ச்சி நெறிக்கு ஒவ்வாத மொழி-இன சித்தாந்தங்களுடன் தொடர்ந்து செயல்படுவதை நிறுத்து, ஆராய்ச்சி செய்து முடிவுகளை அறிவிப்பது நலம்.

வேதபிரகாஷ்

09-02-2010


[1] இனவாத, இனவெறி சித்தாந்தங்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டன. ஆனால், அதை பேசிக் கொண்டு திரிவது, இங்குதான் தெரிகிறது.

[2] அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் என்று பல தமிழர்கள் எப்படியாவது எப்க்கேயாவது நுழைந்துவிடவேண்டும், என வட்டமிட்டுக் கொண்டிருக்கிறர்கள்.

[3] ஐராவதம் மகாதேவன் மற்ற மாநாடுகளில் “நேதி, நேதி” (அதுவுமில்லை, இதுவுமில்ல) என்று சொல்லிவிட்டு விடுவிடுவார்!

[4] தினமலர், சிந்து எழுத்து முறையில் இருந்து வந்ததே தமிழி முறை : ஆய்வாளர், பிப்ரவரி 09,2010; http://www.dinamalar.com/General_detail.asp?news_id=21697

[5] Steve Farmer, The First Harappan Forgery: Indus Inscriptions in the Ninteenth Century, for full text, see here: http://www.safarmer.com/firstforgery.pdf

[6] பூரணசந்திர ஜீவா, சிந்து வெளியில் முந்து தமிழ்,, தய்யல் பதிப்பகம்,127 பாலாஜிநகர், திருவாயர்பாடி,
பொன்னேரி – 601 204.

[7] மதிவாணன், பூர்ணசந்திர ஜீவா மற்றும் இணைத்தளத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வீரர்கள் அத்தகைய வெளிநாட்டடக் காரர்கள் வந்து பேசும் போது, நம்மவர்கள் வந்து கேள்வி கேட்கவேண்டும், அவர்களது ஆராய்ச்சியில் உள்ள பாராபட்சத்தை எடுத்துக் காடவேண்டும். அதைவிடுத்து, “நான் உன்னைப் பாராட்டுகிறேன், நீ என்னைப் பாராட்டு”, என்ற ரீதியில் கூட்டம் கூடினால் என்ன பயன்?

[8] வேதபிரகாஷ், சிந்துசமவெளி சித்திரகுறியீடுகள் படும்பாடு: “திராவிட இனவெறியின் மற்றொரு வெளிப்பாடு”. https://dravidianatheism.wordpress.com/2009/10/14/சிந்துசமவளி-சித்திர-குற/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “சிந்துசமவெளி சித்திர-குறியீடுகள் படும்பாடு:ஆராய்ச்சியாளர்கள் ஏன் வெவ்வேறுவிதமாக, வேறான ஆய்வகங்களில் பேசுகிறார்கள்?”

  1. Brahmallahchrist Says:

    But for the fundamentalism and idiotic chauvnism, this fellow does not have any guts to counter the western scholars in the forums to establish his findings.

    Here, none is there to question him critically and all would be yes-men.

    Moreover, all would support his hypotheses and theories without bothering about methodology, evidences and source materials.

    Till June 2010 and perhaps even beyond, we have more such nonsensical lectures and we have to bear with them.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: