யார் யாரை எல்லாம் கண்டித்து இருக்கிறேன்? பெரியார்

யார் யாரை எல்லாம் கண்டித்து இருக்கிறேன்?

தந்தை பெரியார்

(குடிஅரசு மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் தந்தை பெரியாரால் எழுதப்பட்ட தலையங்கம்)

சகோதர வாசகர்களே!

நமது குடிஅரசு ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருடத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. குடிஅரசு ஆரம்ப இதழில் குடிஅரசு என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து நமது பத்திரிகை என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷம் ஆரம்-பத்தில் நமது பத்திரிகை என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம்.

இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றா-வது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே நமது பத்திரிகை என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம்.

நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்-டாக்கிக் குடி அரசு என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்-பிக்கவேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில், சிறைவாசம் செய்யும்போதே நினைத்தோம்.

அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச நாட்-களுக்குள் குடிஅரசு என்று ஒரு வாரப் பத்திரிகையும் கொங்கு நாடு என்று ஒரு மாதந்திரமும் நடத்தப்-போவதாய் 19.1.1923 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

இவ்விஷயத்தை முதலில் ஸ்ரீமான் திரு. வி. கல்-யாண சுந்தர முதலியார் அவர்களிடம் சொன்-னேன். அவர் எனது கொள்கையைக் கேட்டவுடன் சந்தோஷப்பட்டு இப்படி ஒரு பத்திரிகை வேண்-டியதுதான். அதற்கு நீ தகுதியானவன், நீ ஆரம்-பித்தால் தமிழ்நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால், அதிக நாள் நிலைக்காது. ஒரு கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்துவிடுவார்கள். ஆனாலும், நடந்த வரை லாபம், நடத்துங்கள் என்றார்.

பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் சீக்-கிரத்தில் வெளியாக்கவேண்டுமென்று விரும்புவதாக-வும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டால் அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி வரும்படியும் சொன்னார்.

பிறகு ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் சொன்னேன். அவர் இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதைவிட்டு விட்டு நீ பத்திரிகை நடத்தப்போவது சரியல்ல. உன்-னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. ஆனதால் கண்டிப்பாய்ப் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதன் பேரில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிட்டு மறுபடியும் ஒத்துழையாமைக்-காகவே உழைத்தேன். தற்செயலாய் வைக்கம் சத்தியாக்கிரகம் ஏற்பட்டது. ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் அவர்களும், வைக்கத்திலிருந்து என்னைப் பிடிக்கப் போகிறார்கள் நான் இதோ ஜெயிலுக்குப் போகிறேன், வேறுயாரும் இல்லை. நீ வந்து ஒப்புக்கொள் என்று எழுதின கடிதமும் தந்தியும் என்னைக் குடும்பத்-துடன் வைக்கத்திற்குப் போகும்படி செய்துவிட்டது. அங்கு ஜெயிலில் இருக்கும்போதும் இதே எண்-ணம்தான். அதாவது வெளியில் போனதும் பத்திரிகை நடத்தவேண்டும் என்கிற ஆவல் அதிகமாயிற்று. அதுபோலவே வெளியில் வந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கத் தீர்மானித்துவிட்டேன். அதற்கேற்றாற்-போல் திருப்பாப்புலியூர் ஞானியார் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக மெய்ஞான சிவாச்சார்ய சுவாமிகளும் கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறார்கள் என்று கேள்-விப்பட்டு அவர்களை இங்கு அழைத்து அவர்களைக் கொண்டே ஆரம்ப விழா நடத்தி விடலாம் என நினைத்து, கோயம்புத்தூர் சென்று அழைத்ததும், யாதொரு ஆட்சேபணையும் சொல்லாமல் அவர்கள் ஒப்புக் கொண்டு ஈரோட்டிற்கு வந்து ஆரம்ப விழா நடத்திக் கொடுத்தார்கள். அது சமயம் பத்திரி-காலயத்தைத் திறந்து வைக்கும்படி ஞானியார் சுவாமிகளை கேட்டுக்கொண்டபோது.

அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்–தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதை தெரிவிக்க அஞ்சு-கின்றன. அதனால் தான் நான் இப்பத்திரிகை ஆரம்-பிக்கிறேன். மற்ற பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரிய-மாய்ப் பொது ஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது எமது நோக்கம் என்று சொல்லி இருக்கிறேன். ஞானியார் சுவாமிகளும் பத்திரிகாலயத்தை திறக்கும்போது.

நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்-பத்–திரிகை போன்ற கருத்துடைய பத்திரிகை வேறொன்-று-மில்லை.

உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்-கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ-வேண்டும். குடிஅரசின் கருத்து இதுவே என நான் அறிந்து கொண்-டேன்.

சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்க வேண்-டும். இவை குடிஅரசின் முதல் கொள்கையாய் விளங்கவேண்டும் இப்பத்திரிகையில் ஸ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு என்று ஆசீர்வதித்திருக்கிறார். முதல் இதழ் தலையங்கத்திலும் நமது நோக்கத்தை வெளியிட்ட தலையங்கத்திலும் நாம் குறிப்பிட்டிருப்பதாவது,

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும் இதை அறவே விடுத்து வெறும் தேசம் தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.

மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும். உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்-றென்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும். …இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவது நமது நோக்கமாகும்.

எவர் எனக்கு இனியர்; இவர் எனக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்பின்றி

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென் றிடித்தற் பொருட்டு

என்ற வாக்கைக் கடைப்பிடித்து நண்பரேயாயினுமாகுக, அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்… என்று எழுதி இருக்கிறோம். இவையாவும் 02-.05-.1925-தேதி குடிஅரசில் காணலாம்.

அடுத்தபடி ஆறு மாதம் முடிந்த இதழில் நமது பத்திரிகை என்னும் தலையங்கத்திலும், குடிஅரசு குறிப்-பிட்ட கருத்தைப் பிரச்சாரம் செய்யும் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்-லா-தாதலால்… பிரதிவாரமும் குடிஅரசு தனது ஆத்மாவை வெளிப்படுத்தும் (தத்துவத்தை விளக்கும்) போது கண்ணீர் கொட்டாமலிருக்க முடிவதே இல்லை. இதன் பலனால் உயர்ந்தோர் என்று சொல்லிக்கொள்வோராகிய பிராமணர் முதலிய சமுகத்தாருக்கும், ராஜீயத் தலை-வர் என்று சொல்வோராகிய பல ராஜ தந்திரிகளுக்கும், விரோதியாகவும் அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கும் நமது குடிஅரசு ஆளாக வேண்டியிருப்பதால் இது சீக்கிரத்தில் பாமர ஜனங்களின் செல்வாக்கைப் பெற முடியாமலிருப்பது ஆச்சரியமல்ல என்றும்,

உண்மையில் குடி அரசுக்கு எந்த பிராமணனி-டத்தும் குரோதமோ வெறுப்போ கிடையாது. ஆனால் பிராமணன் உயர்ந்தவன் என்றும், மற்றவர்கள் தீண்டாத-வர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்பன போன்ற இழிவான மிருக உரிமைக்கும் பாத்திரமில்-லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்-ணத்-தினிடத்திலும், தங்கள் வகுப்பார் தான் முன்ன-ணியில் இருக்க வேண்டும். மேன்மையுடன் பிழைக்க வேண்டும், மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்-கொண்டு அதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளிடத்திலும் தான் குடிஅரசுக்கு குரோதமும் வெறுப்பும் இருப்-பதுடன், அதை அடியோடே களைந்தெறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு உழைத்துவருகிறது! என்றும்,

குடிஅரசு ஏற்பட்டு ஆறுமாத காலமாகியும், அது-வரை ஆயிரத்துச் சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்தி-ருக்கிறார்கள், அதனைப் படிக்க வேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லை என்றும், பாமர ஜனங்கள் சரியானபடி குடிஅரசை ஆதரிக்கவில்லையானால் அது தானாகவே மறைந்து போக வேண்டியதுதான். அதன் கடமையே அல்லாமல் வியாபார தோரணையாய் நடந்து வராது என்றும் எழுதியிருந்தது, (இதை 01.11.1925 தேதி இதழில் எழுதியிருந்தது.)

பிறகு ஒருவருஷம் முடிந்து, இரண்டாவது வருஷ ஆரம்ப இதழில் நமது பத்திரிகை என்ற தலை-யங்-கத்திலும், இதுவரை நமக்குள்ள 2000 சந்தாதாரர்களில் நால்வர் அதிருப்திக்கே ஆளாகிறோம் என்று எழுதிவிட்டு.

குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ, நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்-கி-யதை இல்லையானால், அதுதானே மறைந்துவிடு-மே-யல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது. குடி அரசு தோன்றிய பிறகு அது ராஜ்ய உலகத்திலும், சமுக உலகத் திலும், பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்று பலர் நமக்கு எழுதியிருப்பதை நாமும் உபயோ-கப்படுத்திக் கொள்கிறோம் என்றும் எழுதி இருக்-கிறோம்.

ஆகவே, இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்ப இதழில் அதே தலை-யங்கத்துடன் ஒரு குறிப்பு எழுத ஆசைப்படு கிறோம். முதலாவதாக ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறோம். அதாவது குடி அரசுக்கு ஆறு மாதத்தில் ஆயிரம் சந்தாதாரர்களும், ஒரு வருஷத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்களும் இப்போது இரண்டு வருஷத்தில் நாலாயிரத்து அய்நூறு சந்தாதாரர்களும் இருப்பதால் கூடுமானவரையில் தமிழ் மக்களின் ஆதரவைப்பெற்று இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னே குறிப்பிட்ட கொள்கைகளில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக்கொண்டபடி நடந்து வந்திருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, குடிஅரசு குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்-நாலா-யிரத்து அய்நூறைக்கொண்டு நான் சந்தோஷ-மடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடைய-வில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்-பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர்களை ஏற்-படுத்திக்கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தா-தாரர்களை ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்-கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும் 250 சந்தாதா-ரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும், ஊர்கள்தோறும் குடி அரசின் வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிக கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் குடிஅரசுக்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தற்காகவும் குடிஅரசுக் கொள்-கைகளைப் பரப்பப் பாடுபட்டதற்கும், நான் மனப்-பூர்வமாய் நன்றி செலுத்துகிறேன். குடிஅரசுக்கு இரண்டாவது வருஷத்தில் நஷ்டமில்லை. முதல் வருஷத்தின் நஷ்டம் அடைபடவேண்டும். ஆனால் இன்னமும் கொஞ்சம் நல்ல இதழில் இன்னும் நான்கு பக்கம் அதிகப்படுத்தவேண்டும் என்கிற ஆவல் இருந்து வருகிறது. இக்காரியங்களுக்கு இப்போது ஆகும் செலவை விட இன்னமும் வருஷம் ஒன்றுக்கு 2000 ரூபாய் அதிகமாகச் செலவு பிடிக்கும். இனியும் கொஞ்சம் சந்தாதாரர்கள் அதிகமானால் இவைகளைச் செய்ய சவுகரியமாயிருக்கும்.

இவ்வருஷம் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் அதிகமாய் இல்லை என்றே நினைக்கிறேன். பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், குடிஅரசினாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித்தேன், அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதம் என்பதைக் கண்டித்தேன், மதத்தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதச்சடங்கு என்பதைக் கண்டித்திருக்கிறேன், குருக்கள் என்ப-வர்களைக் கண்டித்திருக்கிறேன், கோவில் என்பதைக் கண்டித்திருக்கிறேன், சாமி என்பதைக் கண்டித்திருக்-கிறேன், வேதம் என்று சொல்வதைக் கண்டித்திருக்-கிறேன், சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், புராணம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், பார்ப்பனீயம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், ஜாதி என்பதைக் கண்டித்திருக்கிறேன், அரசாங்கம் என்பதைக் கண்டித்-திருக்கிறேன், உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்-திருக்கிறேன், நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்-கிறேன், நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்-கிறேன், நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்-திருக்கிறேன், ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்-திருக்கிறேன், பிரதிநிதிகள் என்பவர்களைக் கண்டித்-திருக்கிறேன், தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கிறேன், கல்வி என்பதைக் கண்டித்திருக்கிறேன், சுயராஜ்யம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், ஸ்ரீமான்கள் கல்-யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, சி. ராஜ-கோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கிறேன்.

இன்னும் என்ன என்னவற்றையோ யார் யாரையோ கண்டித்திருக்கிறேன். கோபம் வரும்படி வைதுமிருக்-கிறேன். எதைக் கண்டித்திருக்கிறேன், எதைக் கண்டிக்க-வில்லை, யாரை வையவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும், வையவும். துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத்தகாத, வையத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ, என் கண்-களுக்குப் படமாட்டேன் என்கிறது. இவைகளன்றி எனது வார்த்தைகளும், எழுத்துக்களும் செய்கை-களும் தேசத் துரோகமென்றும், வகுப்பு துவேஷ-மென்றும், பிராமணத்துவேஷமென்றும், மான நஷ்ட-மென்றும், அவதூறு என்றும், ராஜ துரோகமென்றும், ராஜத்துவேஷமென்றும், நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், சிலர் சொல்லவும் ஆத்திரப்-படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள் தேச பக்தர்கள், என்பவர்கள் என்னை வையவும், என்னை தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன். இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்யவேண்டும்? சிலருக்காவது மனவருத்-தத்தையும், அதிருப்தியையும் கொடுக்கத்தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும் நாம் ஏன் இக்கவலையும் இவ்வளவு தொல்லையும் அடைய வேண்டும்? நமக்-கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவியுண்டா?

இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல் இருக்கிறது என்பதாக நினைத்து விலகி விடலாமா என்று யோசிப்பதுமுண்டு. ஆனால் விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்-குறைய நமது ஆயுள் காலமும் தீர்ந்து விட்டது. இனி நாலோ அய்ந்தோ அல்லது அதிகமாயிருந்தால் பத்து வயது காலமோ இருக்கலாம். இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நமது மனச்சாட்சிக்கு விட்டுவிடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப்போகிறோம்? என்பதாகக் கருதி மறுபடியும் இதிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை.

உண்மையில் நாம் முன் சொன்ன அரசியல் மதவிஷயம் முதலியதுகளைக் கண்டிக்க நேரிட்ட-போது உண்மையான அரசியல் மதஇயல் இவை-களை நாம் கண்டிக்கவே இல்லை. எதைப்பார்த்-தாலும் புரட்டும் பித்தலாட்டமும் பெயரைப் பார்த்து ஏமாறத் தகுந்ததாயிருக்கிறதே அல்லாமல் தத்துவங்கள் எல்லாம் நமக்கும் நமது நாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் கொஞ்சங்-கூட ரிப்பேர் செய்வதற்கில்லாமல் அடியோடு அழித்து மறுபடியும் புதிதாய் உண்டாக்க வேண்-டியதாகவே இருக்கிறது. நமது காலத்தில் இவை திருத்தப்பாடடையும் என்கிற நம்பிக்கை கொஞ்சமும் இல்லாவிட்டாலும் வேறு யாராவது மகாத்மாவைப் போன்ற மகான்கள் வந்தால் அவர்களுக்கு பக்குவம் செய்து வைத்திருக்க கூடாதா என்றும், அதுவும் முடியாவிட்டால் பலன் எப்படியானாலும் கடமை-யைச் செய்ய வேண்டியது தானே என்கிற முடிவும் கிடைக்கிறது. ஆகவே இக்கஷ்ட மானதும், மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கட்டாயமான இக்காரியத்தில் இறங்கிவிட்டோம். உலகம் ஒப்புக்கொண்டாலும் சரி தள்ளிவிட்டாலும் சரி. நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. நமது கட-மையை எப்படி நாம் பிரதானமாய்க் கருதி இறங்கி இருக்கிறோமோ அதுபோலவே பொது ஜனங்களும், அதாவது இக்கடமையைச் சரி என்று எண்ணி-யவர்கள் தங்கள் தங்களது கடமையையும் எண்ணி அக் கடமையைச் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 01.05.1927

வரலாற்றுச் சுவடுகள்

http://www.viduthalai.com/20100418/news23.html

1925-இல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டது குடிஅரசு இதழ். அதுபற்றிய அறிவிப்பும் பத்திரிகைத் திறப்பு விழாவும் இங்கே தரப்படுகிறது.

நமது பத்திரிகாலயத் திறப்பு விழா சகோதரர்களே!

நானும், ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளை அவர்களும் இப்பத்திரிகை நடத்துவதைப் பற்றி பலநாள் ஆழ்ந்து யோசித்து இப்பொழுதுதான் நடத்தத் துணிந்தோம்.

இப்பத்திரிகையை ஆரம்பிக்கும் நோக்கம், தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த் துவதற்கேயாம். ஏனைய பத்திரிகைகள் பலவிருந்தும், அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். இப்பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன்

அருளால் ஸ்ரீசுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்.

_- குடிஅரசு -செய்தி – 02.05.1925 குடிஅரசு

தாய்த் திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றவளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனேநடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும் பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்துதற்குரியார், இவ்வருங்குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பெரியார் வாக்கை கடைப்பிடித்தே இம்முறை தலைப்படலாயினோம். எம்பால் நிகழும் குற்றங்களை இத்துறையில் அநுபவமின்மை எனதெனக் கொண்டு பொறுத்து மேன்மேலும் ஊக்குபவர்கடன்ஆகும்.

திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக ஆச்சாரிய சுவாமிகளின் ஆசீர்வாதத்தை பெற்று இப்பத்திரிகை வெளிப்பட்டாலும் நெறியிற் பிறழாது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். சுவாமிகளின் ஆசியின் வலிமையால் இப்பத்திரிகை நீண்ட காலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத் தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிது முடையோம்.

இஃதோர் பத்திரிகை யுகமாகும். நமது தமிழ் நாட்டில் நாளடைவில் பத்திரிகைகளின் தொகை பெருகிக் கொண்டே வருகிறது. இதுகாறும் எத்-துணையோ பத்திரிகைகள் தோன்றின; அவைகளுள் சிறிதுகாலம் நின்று மறைந்தொழிந்தன சில; நின்று நிலவுகின்றன பல. பத்திரிகைகள் பல தோன்றுவதற்குக் காரணம் தமிழ்மக்கள் உலகியலை அறிய உளங் கொண்டமையேயாகும். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன் என்ற குறுகிய நோக்கம் அருகி வருகின்றது. இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்று எண்ணி வாழ் நாட்களை வீண் நாட்களாக்கி வந்த காலம் கழிந்துவிட்டது. உறங்கிக் கிடந்த நமது நாட்டார்புத்துயிரும், புத்துணர்ச்சியும் பெற்று நாட்டின் விடுதலையைக் கருதிப் பல துறைகளிலும் உழைக்க முன் வந்து நிற்கிறார்கள். அவ்வுணர்ச்சி நன்றாக வேரூன்றி, மேன்மேலும் தழைத்தோங்க ஒவ்வொருவரும் பாடுபடல் வேண்டும். இக்கடனை ஆற்றப் பலவழிகளுண்டு. அவைகளுள் பத்திரிகையும் ஒன்றாகும். மேனாட்டார் மேன்மையுற்று விளங்குவதற்குக் காரணம் அந்நாடுகளில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் வெளிவந்து உலவுவதேயாகும். அந்நாடுகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் பல்லாயிரக் கணக்கான சந்தாதாரர்கள் இருக்கின்றார்களென்றும். பத்திரிகை நுழையாத சிறுகுடிசைகளும் இல்லையென்றும் நாம் அந்நாட்டுச் சரித்திரங்களில் காண்கிறோம். தமிழ் மக்களின் தொகையை நினைக்கின், இப்பொழுது உலவி வரும் பத்திரிகைகள் மிகக் குறைவாகவே தோன்றும். இன்னும் பல பத்திரிகைகள் காணப்படல் வேண்டும். ஆகை-யினால் எமது பத்திரிகையை மிகையென்று கருத-மாட்டார்களென நம்புகிறோம்.

எமது பத்திரிகையின் நோக்கத்தையறிய நமது தாய்நாடு அரசியல் விரும்புவார்க்கு சமூகவியல், ஒழுக்கவியல், பொருளியல், கல்வி இயல் போன்ற முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வது அறிவு வளர்ச்சிக்காக என்று கூறுவோம். அதிகப் பொருள் செலவிட்டு கட்டியகட்டிடம் அஸ்திவாரம் பலத்தோடு இல்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனிமனிதன், குடும்பம், பலகுடும்பங்கள்சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகை-யினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத்-துறைகளிலும் மேன்மையுற்று விளங்க வேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல்-வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நந்நிலை-யடையவேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்ற-மடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ. உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காவண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்ற-மெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்-டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து, வெறும், தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்-படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.

மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோரத்துவமும் ஓங்கிவளரல் வேண்டும்; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்து மனிதரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமய சண்டைகள் ஒழியவேண்டும்; கடவுளர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லும் இழி தகைமை தொலைய வேண்டும். இன்னோரன்ன பிறநறுங்குணங்கள் நம்மக்களடையப் பாடுபடுவதும் எமது நோக்கமாகும். இதுகாறும் விதந்தோதிய நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றியே ஒழுகுவோம். அன்பு நெறியே எமக்கு ஆதாரம். பொய்ம்மை நெறியையும், புலையொழுக்கத்தையும் எமது அன்பு நெறியால் தகர்த்தெறிவோம். இவர் எமக்கு இனியர், இவர் எமக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்புகள் இன்றிச் செம்மை-நெறி பற்றி ஒழுகி எம்மாலியன்ற தேசத் தொண்டாற்றி வருவோம். நகுதற் பொருட்டன்று நட்டல். மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு எனும் தெய்வப் புலமை திருவள்ளுவரின் வாக்கைக் கடைப்பிடித்து, நண்பரேய-யினுமாகுக. அவர்தம் சொல்லும் செயலும் தேச விடுதலைக்கு கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்து ஒதுக்கப்படும்.

மேற்கூறிய உயரிய நோக்கங்களைத் தாங்கித் தாய்த் திருநாட்டிற்கு தொண்டு இயற்ற வெளிவந்துள்ள எமதருங்குழவியைத் தமிழ்மக்கள் அனைவரும் முழுமனதுடன் ஆதரிப்பார்கள் என்ற முழுநம்பிக்கை யுடையேன். இப்பத்திரிக்கையின் வருடச்சந்தா ரூபா மூன்றே தான். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்-கிழமையன்று வெளிவரும். இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்பாலிப்பனாக.

_- குடிஅரசு, தலையங்கம், 02.05.1925

குறிப்பு: குடிஅரசு முதல் தலையங்கம் மற்றும் சில இதழ்கள், திறப்பு விழா செய்தி ஆகியன கூட்டு ஆசிரியர் வா.மு.தங்கபெருமாள் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டியதொரு உண்மையாகும்.

ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் சொற்பொழிவு மெய்யன்பர்களே! உலகில் நடைபெறும் நிகழ்ச்சி முறைகளைப் பலருக்குத் தெரிவிப்பதற்கும் நல் உணர்ச்சியை மக்களிடையெ-ழுப்புவதற்கும் பத்திரிகைகள் இன்றி-யமையாதன. கிராமாந்திரங்களில் விஷயம் யாதொன்றும் தெரிந்து-கொள்ள இயலாதவர்கள் பத்திரிகைகளினால் வியாபாரம், அரசாங்கமுறை, தற்காலநிலை முதலியவைகளைத் தெரிந்து கொள்வார்கள், பல பெரியார்களின் கருத்தை அறிந்துகொள்வார்கள். வியாபாரம், விவசாயம் முதலிய ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பத்திரிகையிருத்தல் அவசியமாகும். பல ஜனங்களுக்குப் பிரயோஜனமாகும் விஷயங்கள் பலவற்றிற்குப் பல பத்திரிகைகள் அவசியம். ஸ்ரீமான் நாயக்கரால் ஆரம்பிக்கப்படுகின்ற இக்குடிஅரசு பத்திரிகையின் தன்மையைக் கவனித்தால் மிகுந்த ஆராய்ச்சியுடன் ஆரம்பிக்கப்போகும் ஒரு பத்திரிகை யாகக் காணப்படுகின்றது. ஸ்ரீமான் நாயக்கரவர்கள் பேசியதிலிருந்து பலநாள் யோசித்து ஆரம்பிக்கப்படும். பத்திரிகை என்று தோன்றுகிறபடியால் முன்யோசனை-யுடன் இறங்குபவர்கள் என்றும் பின் வாங்காது தைரியமாய் நிலை பெற்று நிற்பார்கள் என்பது உறுதி. மிகுந்த செல்வாக்குடைய ஸ்ரீமான் நாயக்கர் அவர்கள் நடத்தும் இப்பத்திரிகை உங்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிகுந்த பயனை அளிக்குமென நம்புகிறேன். பல பத்திரிகைகளிலிருந்தும் இப்பத்திரிகை போன்ற கருத்தையுடைய பத்திரிகை வேறொன்றுமில்லை. அதனுடைய பெயரே அதற்குச் சான்றாகும் . நாம் நாளாக ஆக நமது நிலையைக் கீழாக்கிக் கொண்டே வருகிறோம். நல்ல குணம், நம்பிக்கை முதலியவைகளை யாமிழந்துவிட்டோம். இந் நிலையில் யாமிருந்தால் முடிவு என்னாகும் என்பதை நாம் கவனிக்கவில்லை. கெட்டவர்கள் இந்நாளில் மிகுந்துவிட்டனர். நன்மையடையும் வழிகள் தடைபட்டுக் கொண்டே வருகின்றன. மேன்மை அடையும் வழியைக் காணோம். கண்டபடி ஆட்சி முறை நடக்கக்கூடாது. தன்னால், தன்பரிசனத்தால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் உண்டாகும் துன்பங்களைத் துடைத்துக் காத்தலே ஆட்சி முறையின் ஒழுங்கு. குடிஅரசு இத்தன்மைக்கு நம்மைக் கொண்டு வரும் என நினைக்கிறேன். அவரவர்-களுடைய கருத்துக்களை யாதொரு நிர்ப்பந்தமுமின்றி வெளியிடச் சுதந்திரம் வேண்டும். நமக்குள் இருக்கும் அவநம்பிக்கை நீங்கிச் சகோதரபாவம் வளர-வேண்டும் .இப்பொழுது நாம் பேச்சளவிலும், சிற்றுண்டி முதலிய சில்லரை விஷயத்திலும்தான் சகோதரபாவத்தைக் காண்கிறோம். உண்மைச் சகோதரத்துவம் எங்கும் காணோம். பிறரது சொத்தைப் பறிப்பதற்கே சகோதரபாவத்தைக் காண்பித்து வருகின்றனர்.உயர்வு, தாழ்வு என்ற ஆணவம் மிகுந்து கிடக்கின்றது. பணக்காரராக இருப்பினும் ஏழையாக இருப்பினும் அன்பு என்பது ஒருவருக்கொருவர் மிகுந்-திருக்க-வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். குடிஅரசின் கருத்தும் இதுவே என நான் அறிந்து கொண்டேன். தேசோத்தாரணத்தில் கவனம் வைத்தல் அவசியமாகும்.-தேச சுதந்திரத்தினால் பாஷை, சமயம் முதலியவற்றிற்கு உத்தாரணம் பிறக்கும். சமயத்திலிருக்கும் கேட்டை ஒழிப்பது மிகவும் அவசியமாகும். இவையெல்லாம் குடிஅரசின் முதல் கொள்கைகளாயிலங்க வேண்டும். யான் இப்பத்திரிகாலயத்தைத் திறந்து வைப்பதால் ஸ்ரீமான் நாயக்கரவர்களுக்கு இதில் எவ்வளவு சிரத்தை-யுண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு. பொது ஜனங்களின் நன்மையைக்கோரி உழைக்கும் பத்திரிகை-யாகையால் எல்லோரும் ஆதரித்தல் அவசியம். இதுகாறும் கூறிய கருத்துக்களில் மாறாது உண்மையான பத்திரிகையாக விளங்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகின்றேன்.

_- குடிஅரசு சொற்பொழிவு, 02.05.1925

குறிப்பு: குடிஅரசு செய்தித்தாள் அலுவலகத்தைத் திறந்து வைத்து திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ. சிவஷண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவு. (தொடக்க இதழின் முக்கியம் கருதி வெளியிடப்படுகிறது).

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: