Archive for ஒக்ரோபர், 2011

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான் பாமகவின் தற்போதைய கொள்கை!

ஒக்ரோபர் 18, 2011

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான் பாமகவின் தற்போதைய கொள்கை!

திராவிடக் கட்சிகளை ஒழிக்க முடியுமா? திராவிடர் கழகம், திராவிடர் கழகம் (ராமகிருஷ்ணன்), பெரியார் திராவிடர் கழகம் (ராஜேந்திரன்), திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட பாசறை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய திராவிட முன்னேற்றக் கழகம், …………என பல திராவிட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் உள்ளன. அவ்வாறிருக்கும் போது, எப்படி “திராவிடக்கட்சிகளை” ஒழிக்க முடியும்?

பாமகவின் கொள்கையற்ற அரசியல்: உள்ளாட்சித் தேர்தலையொட்டி திண்டிவனத்தில் நேற்று இறுதிக் கட்ட பிரசாரத்தில் பேசிய அவர், திராவிடக் கட்சிகள் தான் 44 ஆண்டுகள் நகராட்சியை ஆட்சி செய்துள்ளன[1]. நல்ல திட்டங்கள் ஏதேனும் அவர்கள் செயல்படுத்தியிருந்தால் நானும் அவர்களுக்கே வாக்களிப்பேன். ஆனால் இது வரை அவர்களால் ஏமாற்றமே கிடைத்துள்ளது. புதிய திண்டிவனம் நகரத்தை பாமக உருவாக்கும் என நான் பல முறை உங்களுக்கு வாக்குறுதி அளித்தும் வாக்காளர்கள் அதைக் கேட்கவில்லை. இப்போது நகரில் நல்ல குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளன. மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் இம்முறை பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாமகவின் தற்போதைய கொள்கை திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான்[2]. தமிழ்நாட்டில் 2016ல் பாமக ஆட்சி அமைக்கும்’ என்றார்.

திராவிடக்கட்சிகளை சாடிப் பேசியது (11-10-2011): அக்டோபர் 11ம் தேதியும் இதே மாதிரி பேசியுள்ளார்[3], “…………….திராவிட கட்சிகளான தி.மு.க.-அ.தி.முக. ஆகிய கட்சிகள் தமிழகத்தை கடந்த 44 ஆண்டுகளாக கொள்ளை கூடாரமாக மாற்றிவிட்டனர். திராவிட கட்சிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், திராவிட கட்சிகளை உதறவிட்டு வெளியில் வந்தோம்”..

திராவிட கட்சிகளின் மீதுள்ள காட்டத்தைக் காட்டுகிறாரா அல்லது, அவை இவரை ஒதுக்கிவிட்டதால் சாடுகிறாரா என்று தெரியவில்லை. மதிமுகவிற்கு அடுத்தபடி, ஒதுக்கப்பட்டுள்ளது பாமகதான் போலும்!

பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 “இந்த உள்ளாட்சி தேர்தல் ஊழல் கட்சிகளுக்கும், நல்ல, நேர்மையான, வித்தியாசமான கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியாகும். தமிழ்நாட்டை கடந்த 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து சின்னாபின்னமாக்கி சீரழித்து விட்டன. இந்த திராவிட கட்சிகளின் அத்தியாயத்தை முடிக்கவே பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. ………….. இனிமேல் எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது. இந்த கட்சிகளை வேரறுத்து, ஒழித்து தமிழகத்தில் இந்த கட்சிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே பா.ம.க.வின் வருங்கால செயல்பாடுகளாக அமையும். திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு கொள்கையும் கிடையாது. இவர்களின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பதுதான்…………..44 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகளால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை………….. திராவிட கட்சிகளும், அவர்களின் குடும்பத்தினரும் நடத்தும் தொலைக்காட்சிகளில் தமிழ் கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறது. தமிழகத்தை சீரழித்த இவர்கள் மீது நீதிமன்றம் தண்டனை கொடுப்பது உடனே முடியாது. மக்கள் மன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டும். திராவிட கட்சிகளை இந்த மண்ணில் இருந்து வேரறுக்கும் பொறுப்பை தமிழக மக்கள் எங்களிடம் ஒப்படைத்து உள்ளனர். எனவே பா.ம.க.வுக்கு நீங்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

கட்சிமாறிகள், சித்தாந்த திரிபிகள், கட்டுக்கதை வல்லுனர்கள்: இந்தியாவை நாடு என்று மறுத்து தீர்மானங்களை நிறைவேற்றியச் பாமக இன்று இத்தகைய வீராப்புப் பேசுவது வியப்பாக உள்ளது. அன்று பாமகவில் பண்ருட்டி ராமச்சந்திரன், இதைப் பற்றி அதிகமாகவே பேசிவந்தார். ஆனால், இன்றோ தேதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். திராவிட-ஆரிய கதைகளைப் பேசிக் கொண்டு, “ஆரியர்களுடன்” கூட்டு வைத்துக் கொண்டு, கொள்ளையடித்து நன்றாகவே மாட்டிக் கொண்டனர். இன்னும், அந்த ஆரிய-திராவிட மாயைகள், கட்டுக்கதைகளை பேசியே காலந்தள்ளி வருகின்ற வேளையில், “திராவிடக் கட்சிகளை” வேரறுப்பேன் என்று பேசுவது, செயலில் எந்தச் அளவிற்கு காட்டுவார்கள் என்று பார்ப்போம்.

வேதபிரகாஷ்

18-10-2011